ஆயத்தன் எனும் பக்தன்



முன்னொரு காலத்தில் பொன்னியாற்றின் தென்கரையோரம் ஆநிரைகளை பாதுகாத்து, பராமரிக்கும் அருந்தொழில் செய்து வந்தான் ஆயத்தன்.

கண்ணன்மீது தீரா பக்தி கொண்டவன். எக்காலமும் எம்பெருமான் கண்ணனை மனதால் நினைத்து எண்ணத்தால் அர்ச்சித்து அந்த அதிர்வலைகளை உடலெல்லாம் நிறைத்து!  உணர்வால் உயர்ந்து வாழ்பவன் ஆயத்தன்.

ஆநிரைகளும் அவன் அதிர்வலைகளை உணர்ந்து அவன் எண்ணத்திற்கேற்ப நடந்து கொள்ளும்.
கொடிய விலங்குகள் கூட ஆயத்தன் ஆநிரை மேய்க்கும் எல்லைக்குள் வந்தால் தன் குணம் மறந்து! சாந்தமாய் ஆநிரைகளுடன் பழகி செல்லும்.

ஆயத்தன் ஒருபோதும் மறந்து கூட கண்ணன் நாமத்தை தன்வாயால் சத்தமாய் உச்சரித்தது இல்லை! இது கண்ணனுக்கே பெருவியப்பாய் இருந்தது. தன்மீது பக்தி கொண்டோர் ஆடலும், பாடலுமாய் ஆனந்தத்தில் குதிப்பார்கள் ஆனால் இவனோ அமைதியே உருவாக அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை செய்யும் மாற்றத்தை கூட உணராது இருக்கிறானே!  எப்படி என்று சோதித்தறிய புறப்பட்டார் பூலோகம்.

கண்ணன் புறப்படும் காரணமுணர்ந்த ராதையுமிணைந்து கொள்ள, முதிர்ந்த தம்பதியராய்! பொன்னியாற்றகரையில் ஒருவர்கரமொருவர் பற்றி மெல்ல நடந்தார்கள் ஆயத்தன் ஆநிரை மேய்க்கும் எல்லைக்குள் வந்தார்கள்.

வந்தவர்கள் தங்களையும் மறந்து அந்த அதிர்வலைகளில் களந்தார்கள்.  முக்காலமுனராவிட்டாலும்! கண்ணனை எண்ணத்தால் துதிப்போனுக்கு தெரியாதா வந்தது யாரென்று. வந்தாரை உபசரிக்க எண்ணம் கொண்டான்.

பசு ஒன்று  பால் சொரிய அதை சிரட்டையில் ஏந்தி இருவருக்கும் கொடுத்தான்.  புத்துணர்வை உணர்ந்தான் பாலை அருந்திய  கண்ணன். 

அடியேனை சோதிக்க இப்படியொரு அவதாரமே பரந்தாமா?

அறிந்து கொள்ள ஆசை கொண்டோம்.

 பரந்தாமன் அறியாதது பால்வெளியிலுமுண்டோ?

மாயப் புன்னகை சிந்தினான் கண்ணன்.
எண்ணத்தால் துதிக்கும் காரணத்தை சொல் ஆயத்தா.

பரம்பொருளே அடியேன் மானிடன் உன் பெயரைச் சொல்லி ஆடிப்பாடி  பெயர் சம்பாதித்துவிட்டு!  அறியாமல் பிழை ஏதும் செய்துவிட்டால் உன்னையும் சேர்த்தல்லவா தூற்றும் ஊர்.

போற்றலும், தூற்றலும், கண்ணனை என்செய்யும்?

பரந்தாமா என்னால் நீ போற்றபடலாம், தூற்றலை நான் விரும்பவில்லையே!

என்னாலெனும்போது என்னிலிருந்து பிரிந்து நிற்கிறாயே?

அனைத்தும் நீயேயெனும்போதும் அதிலும் அடங்கியிருப்பது நீதானே கண்ணா?

அப்படியெனில் தூற்றல் பற்றிய கவலையேனுனக்கு?

வாதில் வெல்ல முடியுமா கண்ணனை! அமைதியானான் ஆயத்தன்.

அன்பென்ற அதிர்வை அனுப்பினான் கண்ணனை நோக்கி! கண்டுண்டான் கண்ணன்!

ஆயத்தனே உன் பதிலால் மகிழ்ந்தோம் வார்த்தைகளால் எதையும் விளக்கிட முடியாதென்பதை நன்கு அறிந்துள்ளாய்! ஆழ்ந்த மௌனத்தில் ஏற்படும் அதிர்வலைகளில் அனைத்தும் விளங்கும். உன் மௌனத்தில் எப்போதும் நிறைந்திரு அதுநமக்கு பெருமை சேர்க்கும்.

ஒவ்வொரு காலத்திலும் பொன்னியாற்றின் தென்கரையில் அவதரித்து ஆனந்தம் கொள்வாயாக!
வாழ்த்தினான் கண்ணன்.

தாம் செய்யும் சிறு பிழைகூட தான் வணங்கும் கண்ணனையும் குறைத்து மதிப்பிட்டுவிட செய்யும் என்பதை உணர்ந்த ஆயத்தன் இன்னும் அமைதியாய் அன்பெனும் அதிர்வலைகளை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்.
கிருஷ்ண! கிருஷ்ண! கிருஷ்ணானந்தம்.


Comments

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்